
கோலாலம்பூர், அக் 15 – 15 -வது பொதுத் தேர்தலை நடத்துவதை தடுக்க, முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ மேற்கொண்டிருக்கும் சட்ட முயற்சியை ரத்து செய்யக் கோரி, இடைக்கால அரசாங்கம், பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், தேர்தல் ஆணையம் ஆகியவை இணைந்து நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருக்கின்றன.
கூட்டரசு அரசியலமைப்பின் படி, நாடாளுமன்றத்தைக் கலைக்க பேரரசர் வழங்கிய அனுமதி அதிகாரம் குறித்து , நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியாது என கூறி அம்மூன்று தரப்பினரும் தங்களது விண்ணப்ப மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், அரசியலமைப்பு சட்டத்தின் 118 -வது பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டது போல், எந்தவொரு தேர்தல் நடைமுறையாக இருந்தாலும் அதன் தொடர்பில், தேர்தல் மனுவின் மூலமாகவே கேள்வி எழுப்ப முடியுமென அத்தரப்பினர் கூறியுள்ளனர்.
இந்த மனு விண்ணப்பம் , இம்மாதம் அக்டோபர் 20 -ஆம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதி Datuk Ahmad Kamal முன்னிலையில் செவிமடுக்கப்படவுள்ளது.