
ஜொகூர், பத்து பஹாட்டில், சாலையில் ‘zig-zag’ சாகசம் புரிந்து, ஆபத்தான முறையில் காரை செலுத்தியதால் சமூக ஊடகங்களில் வைரலான ஆடவன் கைது செய்யப்பட்டான்.
சாலையில் வாகன நெரிசல் காணப்பட்ட சமயத்தில், அந்த 34 வயது ஆடவன் ஆபத்தான முறையில் சிவப்பு நிற வீரா ரக காரை செலுத்தும் காணொளியை மற்றொரு வாகனமோட்டி பதிவுச் செய்து சமூக ஊடகத்தில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.
நேற்றிரவு மணி 8.45 வாக்கிக், முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த அந்த காணொளியை போலீசார் அடையாளம் கண்டதாக, பத்து பஹாட் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் இஸ்மாயில் டோல்லா தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, பின்னிரவு மணி ஒன்று வாக்கில், தாமான் பூரா கெஞ்சானா ஸ்ரீ காடிங்கிலுள்ள, வீடொன்றிலிருந்து அவ்வாடவன் கைது செய்யப்பட்டதையும், அவன் அபாயகர சாகசத்திற்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டதையும் இஸ்மாயில் டோல்லா உறுதிப்படுத்தினார்.
முன்னதாக, நெரிசல் மிகுந்த சாலையில், சிவப்பு நிற வீரா ரக கார் ஒன்று அபாயகரமான முறையில் இதர வாகனங்களை முந்திச் செல்லும் காணொளி ஒன்று வைரலானது குறிப்பிடத்தக்கது.