
கிள்ளான், அக்டோபர் 3 – ஜாலான் லாங்காட் – கிள்ளான் சாலையிலுள்ள, சமிக்ஞை விளக்கு சந்திப்புக்கு அருகிலுள்ள சாலையோரத்தில், உணவு விநியோகிப்பாளர் ஒருவரை அடித்து அடாவடியாக நடந்து கொண்டதாக நம்பப்படும் மூன்று சந்தேக நபர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நேற்று மாலை மணி 6.30 வாக்கில், உள்நாட்டவர்களான, 28 வயதுக்கும் 39 வயதுக்கும் இடைப்பட்ட அம்மூவரும் கைதுச் செய்யப்பட்டதாக, தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் சா ஹூங் போங் தெரிவித்தார்.
அம்மூவருக்கும் எதிரான, தலா இரு பழைய கிரிமினல் குற்றப்பதிவுகளும், போதைப் பொருள் தொடர்பான குற்றப்பதிவுகளும் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதே சமயம், சம்பவத்தின் போது அம்மூவரில் முதன்மை சந்தேக நபராக கருதப்படும் ஆடவன், போதைப் பொருள் உட்கொண்டிருந்ததும் சிறுநீர் பரிசோதனையில் தெரிய வந்ததாக போங் சொன்னார்.
முன்னதாக, காரில் வந்த மூன்று ஆடவர்கள், சாலை சமிக்ஞை விளக்குக்கு அருகில், சாலையோரத்தில் தம்மை தடுத்து நிறுத்தி அடித்ததோடு, தமது மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தியதாக, 21 வயது ஆடவர் ஒருவர் போலீஸ் புகார் செய்ததாக, நேற்று போங் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.