ஜோகூர் பாரு, ஆகஸ்ட் -24 – ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் (EXCO) ஒருவரின் காரோட்டுநர், சாலையின் நடுவே வாகனத்தை நிறுத்தி மற்றொரு காரோட்டியை கடிந்துக் கொண்டது பழையச் சம்பவமாகும்.
ஆனால் இப்போது தான் அது வைரலாகியுள்ளது.
என்ற போதிலும் அக்காரோட்டுநருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக, சம்பந்தப்பட்ட EXCO -வான லீ திங் ஹான் (Lee Thing Han) தெரிவித்தார்.
ஆபத்தாக வாகனமோட்டியதன் காரணமாகவே மற்றொரு காரோட்டியை அவர் கடிந்துகொண்டார்.
ஆனால் அவரின் தொனி சற்று கடுமையாக இருந்துள்ளது; எனவே மாநில அரசு அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒரு வேளை போலீசில் புகார் செய்யப்பட்டிருந்தால், அதற்கு ஒத்துழைக்குமாறும் அவர் கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாக, திங் ஹான் கூறினார்.
காரோட்டுநரின் செயலுக்காக தாமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக அவர் சொன்னார்.
சம்பந்தப்பட்ட காரோட்டுநர், ஜோகூர் பாரு மாநகரில் ஆபத்தான முறையில் சென்றுக் கொண்டிருந்த காரை நிறுத்தி அதன் ஓட்டுநரிடம் உரத்தக் குரலில் ஏசும் வீடியோ முன்னதாக வைரலாகியிருந்தது.