கோலாலம்பூர், ஆகஸ்ட்-26 – ‘மகாதீர் தகப்பனார் பெயர் இஸ்கண்டார் குட்டி’ என்பது தமது பெயரே அல்ல என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட் கூறியுள்ளார்.
அந்த பெயரில் எந்த காலத்திலும் தமக்கு அடையாள அட்டையும் இருந்ததில்லை;
தம்மை யாருமே ‘மகாதீர் தகப்பனார் பெயர் இஸ்கண்டார் குட்டி’ என்றும் அழைத்ததில்லை என்றார் அவர்.
எனவே, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி அவ்வாறு கூறியது அப்பட்டமான பொய் என கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் மகாதீர் சொன்னார்.
2017, ஜூலை 30-ஆம் தேதி கிளானா ஜெயா அம்னோ தொகுதி மாநாட்டில் பேசிய போது, அடையாள அட்டையின் நகல் என எதையோ காட்டி அந்த அம்னோ தலைவர் அக்கூற்றை வெளியிட்டார்.
தமக்கு மகாதீர் தகப்பனார் பெயர் இஸ்கண்டார் குட்டி என்ற ஒரு பெயர் இருப்பது சாஹிட் சொல்லித் தான் தமக்கே தெரியுமென, மகாதீர் கிண்டலாகக் கூறினார்.
அவ்விவகாரம் தொடர்பில் சாஹிட் மீது மகாதீர் தொடுத்துள்ள அவதூறு வழக்கு விசாரணையில் இன்று சாட்சியளித்த போது மகாதீர் அவ்வாறு சொன்னார்.