
சிகமாட், செப் 15 – ஜாலான் ஜோகூர் பாரு – சிரம்பான் சாலையின் 167 ஆவது கிலோமீட்டரில் லாபிஸ் தெனாங் ஸ்டேஷனுக்கு அருகில் மூன்று கார்கள் சம்பந்தப்பட்ட கோர விபத்தில் மூன்று பெண்கள் மரணம் அடைந்தனர். அந்த விபத்தில் நான்கு சிறார்கள் உட்பட 11 பேர் காயம் அடைந்ததாக லாபிஸ் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு நடவடிக்கையின் தலைவர் ஸாகாரியா முகமட் தெரிவித்தார். லாபிஸ் மற்றும் பண்டார் பாரு சிகமாட் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 18 தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டதாக அவர் கூறினார். இரண்டு கார்கள், ஒரு SUV வாகனம் இவ்விபத்திற்குள்ளாகின.
விபத்து நிகழ்ந்த இடத்திலேயே மூன்று பெண்கள் மரணம் அடைந்த வேளையில் காரில் இருந்த இதர எழுவர் காயம் அடைந்தனர். ஆடவர் ஒருவருடன், இரண்டு பெண்கள், இரண்டு பையன்கள் மற்றும் இரண்டு இளம் பெண்களும் காயம் அடைந்தனர். SUV வாகனத்தில் இருந்த இரண்டு ஆடவர்கள், ஒரு பெண் மற்றும் மற்றொரு காரில் இருந்த ஒரு சிறுமியும் காயம் அடைந்தனர். இதனிடையே இந்த விபத்தில் மரணம் அடைந்த மூன்று பெண்களும் சிம்பாங் ரெங்கம், குளுவாங் மற்றும் பெனுட்டைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் என கூறப்பட்டது.