Latestமலேசியா

அதிக வெப்பநிலை: முதல் கட்ட எச்சரிக்கைப் பட்டியலில் சேர்ந்த KL, Petaling

பெட்டாலிங், மார்ச் 1 – நாட்டில் முதல் கட்ட வெப்பநிலை எச்சரிக்கையின் கீழ் வைக்கப்பட்டுள்ள இடங்களின் பட்டியலில் புதிதாக பெட்டாலிங்கும், கோலாலம்பூரும் இணைந்திருக்கின்றன.

மலேசிய வானிலை ஆராய்ச்சித் துறை MetMalaysia-வின் நேற்று மாலை வரைக்குமான தகவலின் படி, ஒட்டுமொத்த பெர்லிசும், ஏறக்குறைய கெடாவின் அனைத்துப் பகுதிகளும் உள்ளிட்ட 23 இடங்கள் அந்த முதல் கட்ட எச்சரிக்கைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

கெடாவில் Langkawi, Kota Setar, Yan, Pendang, Baling, Sik, Padang Terap, Kubang Pasu ஆகியவையும், பினாங்கில் வட மற்றும் மத்திய Seberang Perai, மற்றும் வடகிழக்கு மாவட்டமும், பேராக்கில் Larut Matang, Kinta, Manjung, Kampar, Batang Padang, Kuala Kangsar உள்ளிட்டவை அதில் பட்டியலிடப்பட்டுள்ளன.

சிலாங்கூரில் அந்த முதல் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் செப்பாங்குடன் தற்போது பெட்டாலிங் சேர்ந்திருக்கிறது.

தொடர்ந்தாற்போல் மூன்று நாட்களுக்கு 35 முதல் 37 பாகை செல்சியசுக்கு வெப்ப நிலை பதிவாகும் இடங்களுக்கு, இந்த முதல் கட்ட எச்சரிக்கை விடுக்கப்படும்.

அதே, மூன்று நாட்கள் தொடர்ச்சியாக 37 முதல் 40 பாகை செல்சியஸ் வெப்ப நிலையைப் பதிவுச் செய்யும் பகுதிகள் இரண்டாம் கட்ட எச்சரிக்கைப் பட்டியலில் வைக்கப்படும்.

நாட்டில் தற்போதைக்கு கெடாவின் Pokok Sena மட்டுமே இரண்டாம் கட்ட வெப்பநிலை எச்சரிக்கைப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது.

முந்தைய இரண்டு ஆண்டுகளைக் காட்டிலும் மலேசியாவில் இவ்வாண்டு வெப்ப மற்றும் வறட்சி காலம் சற்று முன்கூட்டியே தொடங்கி விட்டதாக MetMalaysia ஏற்கனவே கூறியிருந்தது.

வடகிழக்குப் பருவமழை, தீபகற்பத்தின் வட பகுதிகளில் மார்ச் கடைசியில் முடிவுக்கு வருவதோடு எல் நினோ நிகழ்வின் தாக்கமும் தொடங்கிருப்பதே இந்த அதிக வெப்பநிலைக்குக் காரணமாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!