
சிங்கப்பூர், மே 25- சிங்கப்பூரின் நவீனச் சிற்பி என வருணிக்கப்படும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் லி குவான் யூவுக்கு தமிழ்நாட்டில் மன்னார்குடியில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களில் பெரும்பகுதியினர் மன்னார்குடி, பட்டுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அங்குள்ள கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சிங்கப்பூருடன் தொடர்பு உண்டு என்பதை நான் நன்றாக அறிவேன். இந்த கிராமங்களில் இருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள் தான் அதிகம். எனவே, லீ குவான் யூ பெயரால் நூலகமும் சிலையும் மன்னார்குடியில் அமையும் என ஸ்டாலின் தெரிவித்தார். சிங்கப்பூரில் உள்ள தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்திய கலாசார சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோதுபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் தந்தை என்று போற்றப்படும் லீ குவான் யூ அவர்களால்தான் தமிழர்களும் தமிழும் இங்கு உயர்வை அடைய முடிந்தது. அறிஞர் அண்ணா அவர்களின் பேச்சால் ஈர்க்கப்பட்டவர் லீ குவான் யூ. சிங்கப்பூரில் அண்ணாவின் உரையை கேட்ட லீ குவான் யூ, தனது மூத்த சகோதரர் என்று பாசத்தோடு அவரை அழைத்தார். அதுமட்டுமல்ல, தமது அலுவலகத்துக்கு அண்ணாவை அழைத்து விருந்து கொடுத்தார். அதனால்தான் லீ குவான் யூ இறந்தபோது சிங்கப்பூர் நாயகன் என்று போற்றினார் கலைஞர் என ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.