சிங்கப்பூரில், அனுமதியின்றி ஆளில்லா விமானங்கள் பறக்கத் தடை; நாளை தொடங்கி அமலுக்கு வருகிறது

சிங்கப்பூர், நவம்பர் 20 – சிங்கப்பூரில், இனி அனுமதியின்றி ஆளில்லா விமானங்களை பறக்க தடை விதிக்கப்படுவதாக, அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமும், போலீஸ் படையும் கூறியுள்ளன.
நாளை நவம்பர் 21-ஆம் தேதி தொடங்கி அந்த தடை அமலுக்கு வருகிறது.
அதனால், சிங்கப்பூரிலிருந்து எல்லை தாண்டி ஆளில்லா விமானங்களை செலுத்தினாலோ அல்லது வெளியிலிருந்து ஆளில்லா விமானங்களை சிங்கப்பூருக்குள் பறக்க விட்டாலோ, அது குற்றமாக வகைப்படுத்தப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 50 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் அபராதம் அல்லது ஈராண்டுகள் சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
அனுமதி இன்றி சிங்கப்பூர் எல்லைக்குள் பறக்கும் ஆளில்லா விமானத்தை உடனடியாக பறிமுதல் செய்யும் முழு அதிகாரமும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்தகைய விமானங்கள் பொது அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம். பல சமயங்களில், ஆளில்லா விமானங்களை கொண்டு கடத்தல் மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் நாம் பார்க்கிறோம். அதனால், அந்த தடை பிறப்பிக்கப்படுவதாக, சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமும், போலீஸ் படையும் கூட்டு அறிக்கை ஒன்றின் வாயிலாக கூறியுள்ளன.