ஜோகூர் பாரு, ஏப்ரல் 25 – சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சாடின் டின்கள், அனிசாகிஸ் எஸ்பிபியால் எனப்படும் ஒருவகை ஒட்டுண்ணி புழுக்களால் மாசடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஒட்டுண்ணிகளால் பாதிக்கப்பட்ட உணவை உட்கொள்வது, கடுமையான வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தியை ஏற்படுத்தலாம்.
மார்ச் 27-ஆம் தேதி, ஜோகூர் பாரு, சுல்தான் இஸ்கண்டார் சோதனைச் சாவடியில், அந்த மாசடைந்த சாடின் டிங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதனால், சுமார் 84 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான, 16 ஆயிரத்து 320 கிலோகிராம் எடை சாடின்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த சாட்டின் டின்களை ஏற்றியிருந்த லோரி முறையான இறக்குமதி அனுமதியை காட்டத் தவறியதை தொடர்ந்து, அதிலிருந்த சரக்குகள் பறிமுதல் செய்யப்பட்டதாக, ஜோகூர் Maqis எனப்படும் சுங்க, குடிநுழைவுத் துறை, தனிமைப்படுத்தும் இயக்குனர், எடி மாட் யூசோப் தெரிவித்தார்.
அதோடு, இரசாயன பரிசோதனை வாயிலாக, அந்த சாடின்கள் மாசடைந்திருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, எடி சொன்னார்.
அதனால், சீனாவிலிருந்து சிங்கப்பூர் வாயிலாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட அந்த சாடின் டின்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள வேளை ; குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஒரு லட்சம் ரிங்கிட் அபராதம் அல்லது ஆறு மாதச் சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.