சிங்கப்பூரில் கோவிட் 19 – தொற்று இரண்டு மடங்காக உயர்ந்ததைத் தொடர்ந்து பொது மருத்துவமனைகளில் போதுமான இடங்கள் இருப்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கையை அந்நாட்டின் சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருகிறது. மே 5ஆம் தேதி தொடங்கி மே 11 ஆம் தேதிவரையிலான வாரத்தில் கோவிட் 19 – தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,900 ஆக அதிரித்தது. அதற்கு முந்தைய வாரத்தில் தொற்றுக்கு பாதிக்கப்பட்டிருந்த 13,700 பேர்களை ஒப்பிடுகையில் அந்த எண்ணிக்கை கடந்த வாரம் 90 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
இதற்கு முந்தைய வாரத்தில் தினசரி சராசரி 181 பேர் கோவிட் 19 – தொற்றினால் மருந்துவமனையில் சேர்ந்தனர். இந்த எண்ணிக்கை கடந்த வாரம் தினசரி 250 பேர்களாக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த வாரத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் தினசரி சராசரி மூவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அரசாங்க மருத்துவமனைகளில் அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதை ஒத்திவைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.