சிங்கப்பூருக்குள் நுழையவும் அங்கிருந்து வெளியேறவும் ஒற்றை செயலியைப் பயன்படுத்த உள்துறை அமைச்சு முடிவு
சிங்கப்பூர், நவம்பர்-14 – சிங்கப்பூருக்குள் நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் மலேசியர்களின் குடிநுழைவு பரிசோதனை நடைமுறையை எளிதாக்க, அரசாங்கம் ஒற்றை செயலி முறையைத் தேர்ந்தெடுத்துள்ளது.
சுல்தான் இஸ்கண்டார் கட்டடத்தின் (BSI) சுங்க, குடிநுழைவு மற்றும் தனிமைப்படுத்தல் (CIQ) வளாகத்தில் MyTrip, MyRentas, MyBorderPass ஆகிய 3 செயலிகள் பரீட்சார்த்தமாக பரிசோதனைக்கு விடப்பட்டிருந்தன.
மலேசிய-சிங்கப்பூர் எல்லையில் நெரிசலைக் குறைப்பதில் அவை எந்தளவுக்கு ஆக்கப்பூர்வமாக செயல்படுகின்றன என்பதை மதிப்பிடவே அச்சோதனையாகும்.
இந்நிலையில் அவற்றில் ஒன்றை சிறந்ததாகத் தேர்ந்தெடுத்து, அப்பரிந்துரையை நிதியமைச்சின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருப்பதாக, உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் (Datuk Seri Saifuddin Nasution Ismail) தெரிவித்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட செயலி எது என்பது விரைவிலேயே அறிவிக்கப்படும்.
ஆனால், காத்திருக்கும் நேரத்தை அச்செயலி கணிசமாகக் குறைக்க உதவுகிறது என்பதை மட்டும் தம்மால் இப்போது உறுதியாகக் கூற முடியும் என்றார் அவர்.
குடிநுழைவு நடைமுறைகளை அச்செயலியிலேயே முடித்துக் கொள்ள முடியுமென்றாலும், சரிபார்ப்பு செயல்முறைகளுக்குப் பயணிகள் தங்களிடன் கடப்பிதழை தொடர்ந்து உடன் கொண்டு வர வேண்டும் என அமைச்சர் சொன்னார்.
இது முதலில் BSI மற்றும் CIQ வளாகங்களில் பேருந்துப் பயணிகளுக்கும் மோட்டார் சைக்கிளோட்டிகளும் மட்டும் அமுலுக்கு வரும்.
பின்னர் மலேசியாவின் அனைத்து 114 நுழைவாயில்களிலும் பயணிகளுக்கு விரிவுப்படுத்தப்டும்.