சிங்கப்பூர், அக்டோபர்-3 – விலையுயர்ந்த பொருட்களைப் பெற்றது மற்றும் நீதிக்குத் தடையாக இருந்த குற்றங்களுக்காக சிங்கப்பூர் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரனுக்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம் 12 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
இசைக் கச்சேரி மற்றும் பிரிட்டனில் கால்பந்தாட்டத்தைக் காண்பதற்கான டிக்கெட்டுகள் உட்பட விலை மதிப்பிலான பொருட்கள் வடிவில், 403,000 சிங்கப்பூர் டாலரை பெற்றதாக அவர் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
அமைச்சராக அரசாங்க உயர் பதவியில் செல்வாக்குமிக்கவராக ஈஸ்வரன் திகழ்ந்துள்ளார்.
எனவே, அவரின் குற்றம் கடுமையானது என நீதிபதி சுட்டிக் காட்டினார்.
அரசாங்க உயர் பதவிகளில் இருப்பர்கள் அரசு ஊழியர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் அவர் நினைவுறுத்தினார்.
ஈஸ்வரன் கேட்டுக் கொண்டதற்கிணங்க அக்டோபர் 7-ஆம் தேதி மாலை 4 மணிக்குத் தொடங்கி தண்டனையை அனுபவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
மொத்தமாக 35 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கிய ஈஸ்வரன், திருத்தப்பட்ட 5 குற்றச்சாட்டுகளை கடந்த வாரம் ஒப்புக் கொண்டார்.
அவற்றுக்கான தண்டனையே இன்று விதிக்கப்பட்டது.