Latestமலேசியா

சிங்கப்பூர் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன், திருத்தப்பட்ட 5 குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டுள்ளார்.

பொதுச் சேவை ஊழியராக இருந்து கொண்டு விலை உயர்ந்த பொருட்களைப் பெற்ற 4 குற்றச்சாட்டுகளும், நீதிக்கு இடையூறாக இருந்த ஒரு குற்றச்சாட்டுமே திருத்தப்பட்ட அந்த 5 குற்றச்சாட்டுகளாகும்.

இசைக் கச்சேரி மற்றும் பிரிட்டனில் கால்பந்தாட்டத்தைக் காண்பதற்கான டிக்கெட்டுகள் உட்பட விலை மதிப்பிலான பொருட்கள் வடிவில், 403,000 சிங்கப்பூர் டாலரை பெற்றதாக அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

அரசு ஊழியராக விலைமதிப்புள்ள பொருள்களைப் பெற்றக் குற்றத்திற்கு அதிகபட்சமாக ஈராண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

அதே சமயம் நீதிக்கு இடையூறு விளைவித்தக் குற்றத்திற்கு, அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

கடந்த ஜனவரி மாதம் பதவி விலகிய ஈஸ்வரன், முன்னதாக லஞ்சம் வாங்கியது உள்ளிட்ட 35 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எஞ்சிய 30 குற்றச்சாட்டுகளை, மேற்கண்ட 5 குற்றங்களுக்கான தண்டனை அறிவிப்பின் போது நீதிமன்றம் கருத்தில் எடுத்துக்கொள்ள அரசுத் தரப்பு விண்ணப்பிக்கவிருக்கிறது.

சிங்கப்பூர் வரலாற்றில் 40 ஆண்டுகளில் நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கியுள்ள முதல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் ஆவார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!