தெலுக் இந்தான், ஆகஸ்ட்-8 – கடந்த திங்கட்கிழமையன்று தனது பாட்டி மற்றும் சின்னம்மாவை முகத்தில் குத்தி, கன்னத்தில் அறைந்ததாகக் குத்தகையாளர் ஒருவர் பேராக், தெலுக் இந்தான் மேஜீஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டார்.
தாமான் இண்டா ஜயாவில் உள்ள வீட்டில் இரவு 10.30 மணியளவில் அவர் அக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
எனினும், 68 வயது சின்னம்மாவின் முகத்தில் குத்தியதாகவும், 90 வயது பாட்டியைக் கன்னத்தில் அறைந்ததாகவும் கொண்டு வரப்பட்ட 2 குற்றச்சாட்டுகளையும், 34 வயது M D நவராஜன் மறுத்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவியல் சட்டத்தின் 323-வது பிரிவின் கீழ் அதிகபட்சம் ஓராண்டு சிறை மற்றும் இரண்டாயிரம் ரிங்கிட் அபராதமும், 326A பிரிவின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட காலத்தை விட 2 மடங்கு அதிகமான சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
நவராஜனை, 5,000 ரிங்கிட் மற்றும் ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் நீதிபதி ஜாமீனில் விடுவித்தார்.
வழக்கு முடியும் வரை, பாதிக்கப்பட்ட இருவரையும் பார்க்கவோ தொந்தரவு செய்யவோ கூடாது என்ற கூடுதல் நிபந்தனையும் அவருக்கு விதிக்கப்பட்டது.
வழக்கு செப்டம்பர் 10-ல் மறுசெவிமெடுப்புக்கு வருகிறது.