சிரம்பான், ஏப்ரல் 30 – நெகிரி செம்பிலான், ஜாலான் சிரம்பான் – தம்பின் சாலையோரத்தில், பழுதடைந்த காருக்கு வெளியே நின்றுக் கொண்டிருந்த மூவரை சரக்கு லோரி ஒன்று மோதித் தள்ளியதில், பணி ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நேற்று மாலை மணி 5.55 வாக்கில் அவ்விபத்து நிகழ்ந்ததாக, சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் முஹமட் ஹத்தா சே டின் தெரிவித்தார்.
பழுதடைந்து சாலையோரத்தில் நின்ற புரோட்டோன் வீரா ரக காரை அவ்வழியே சென்ற ஹோண்டா கெட்ஸ் ரக கார் ஒன்று பின்னால் இருந்து மோதித் தள்ளியது.
அதனால், வீரா காரின் ஓட்டுனரான 70 வயது முதியவர் அவரது மனைவி மற்றும் ஹோண்டா கெட்ஸ் கார் ஓட்டுனர் ஆகியோர் சாலையோரத்தில் உதவிக்காக காத்திருந்தனர்.
அவர்களுக்கு, மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் உதவ நின்றுள்ளார். அப்பொழுது அங்கு வந்த சரக்கு லோரியை பின்னால் இருந்து பேருந்து ஒன்று மோதியதை தொடர்ந்து, அந்த லோரி சாலையோரத்தில் நின்றுக் கொண்டிரு ந்த மூவரை இடித்து தள்ளியது.
அதனால், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக வீரா ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவ்விபத்தில் சிக்கிய மற்றவர்கள் காயம் எதுவும் இன்றி உயிர் தப்பினர்.