
சிரம்பான். நவ 1 – சிரம்பான் – கோலாலம்பூர் விரைவு பஸ் சேவையை பயன்படுத்துவோர் இனி கூடுதலாக ஒரு ரிங்கிட் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. பயணிகளிடமிருந்து புகார் கிடைத்ததைத் தொடர்ந்து கூடுதலான ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஊராட்சி மேம்பாடு மற்றும் போக்குவரத்து குழுவின் ஆட்சிக் குழு உறுப்பினர் அருள் குமார் தெரிவித்தார். தரை பொது போக்குவரத்து நிறுவனத்தின் அதிகாரிகளுடன் இன்று சிரம்பான் பஸ் முனையத்திற்கு வருகை புரிந்த பின் அவர் இதனை தெரிவித்தார்.
வழக்கமான கட்டணத்தோடு கூடுதலாக 1 ரிங்கிட் கட்டணமும் ,மேற்கொண்டு 70 சென்னும் கேட்கப்படுவதாக பயணிகளிடருந்து புகார் பெற்றதைத் தொடர்ந்து தாம் இன்று சிரம்பான் பஸ் முனையத்திற்கு சென்றதாக அவர் தெரிவித்தார். கோலாலம்பூர் மற்றும் சிரம்பான் ஒருவழி பயணத்திற்கான விரைவு பஸ் கட்டணம் 8 ரிங்கிட்டாக மட்டுமே இருக்கும் என அருள் குமார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். கூடுதலாக விதிக்கப்பட்ட ஒரு ரிங்கிட் ரத்துச் செய்யப்பட்டுவிட்டது. ‘Facility’ கட்டணம் என விதிக்கப்படும் 70 சென் கட்டணத்தை நாங்கள் இன்னும் பரிசீலித்து வருகிறோம் என அவர் கூறினார்.