கோலாலம்பூர், டிச 4 – சிறார்கள், பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்களின்
வயதுப் பிரிவு சம்பந்தப்பட்ட மனநல பிரச்னை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை துணையமைச்சர் லுகனிஸ்மான் அவாங் சௌவ்னி ( Lukanisman Awang Sauni ) தெரிவித்தார். மனநலம் தொடர்பான பிரச்னைக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டு 424,000 பேராக இருந்தது. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை
922,318 பேராக அதிகரித்ததாக தேசிய நோயுற்ற சுகாதார ஆய்வு அறிக்கையின் புள்ளி விவரத்தின் மூலம் தெரியவருவதாக அவர் கூறினார். பள்ளி மாணவர்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் சம்பந்தப்பட்ட மனநலப் பிரச்னைகளின் புள்ளிவிவரங்களை தெரிவிக்கும்படி Ledang நாடாளுமன்ற தொகுதியின் பக்காத்தான் ஹரப்பான் சைட் இப்ராஹிம் சைட் நோர் ( Syed Ibrahim Syed Nor ) எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது Lukanisman இத்தகவலை வெளியிட்டார்.
மேலும் கடந்த 10 ஆண்டுகளில் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 2012 ஆம் ஆண்டில் 7.9 விழுக்காடாக இருந்த தற்கொலை செய்துகொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கை கடந்த 2022 ஆம் ஆண்டு 13.1 விழுக்காடு உயர்ந்ததாக Lukanisman கூறினார். தேசிய மனநல சுகாதார மையத்தை நிறுவுவதற்கும், குழந்தைகள் மற்றும் பதின்ம வயதோருக்கான மனநல செயல் திட்டத்தை உருவாக்குவதற்கும் தனது அமைச்சு நடவடிக்கையை எடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.