
கோலாலம்பூர், நவ 27- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அடுத்த வாரம் தமது சிறிய அளவிலான அமைச்சரவையை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பி.கே.ஆர் துணைத்தலைவர் ரபிசி ரம்லி முக்கிய அமைச்சுக்கு பொறுப்பு ஏற்பார் என தகவல்கள் வெளியாகின. அடுத்த ஆண்டு உலகப் பொருளாதாரம் உறுதியற்றதாக இருக்கக்கூடும் என்பதால் அதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை சிறியதாக இருக்கும் என தெரிகிறது. ஒட்டு மொத்தமாக அரசாங்க செலவை குறைத்து மக்களின் பிரச்சனைக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் அமைச்சரவை இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இது தவிர தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஐவர் அமைச்சராக நியமிக்கப்படும் சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது.
சரவா GPS நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் அமைச்சர்கள் அல்லது துணையமைச்சர்களாக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. துணைப்பிரதமர் மற்றும் கிராம மேம்பாட்டுத்துறையின் அமைச்சராக அம்னோவின் துணைத்தலைவர் டத்தோ முகமட் ஹசான் நியமிக்கப்படலாம் என தெரிகிறது. DAP-யின் தலைமைச் செயலாளர் அந்தோனி லோக் போக்குவரத்து அமைச்சராகவும் பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினரான Young Syefura Othman மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத்தறையின் துணையமைச்சராக நியமிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.