
கோலாலம்பூர், செப்டம்பர் 13 – தமக்கு எதிரான தேச நிந்தனை குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அபராதத்தைச் செலுத்துவதற்குப் பதிலாக, சிறைக்குச் செல்ல தாம் தயாராக இருப்பதாக, பாஸ் கட்சி தலைவர், டான் ஸ்ரீ அப்துல் ஹடி அவாங் கூறியுள்ளார்.
மன்னிப்பு வாரியத்தின் அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பியதால், 1948-ஆம் ஆண்டு தேச நிந்தனை சட்டம், 1998-ஆம் ஆண்டு தொடர்பு பல்லூடக சட்டங்களின் கீழ், ஹடி அவாங் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.
அபராதம் செலுத்துவதற்குப் பதிலாக, அந்த பணத்தை பாஸ்தி பராமரிப்பு இல்லத்திற்கு வழங்குவது மேல் என ஹடி அவாங் குறிப்பிட்டுள்ளார்.
மக்களவையில் நடைபெற்ற, 12-வது மலேசியத் திட்டத்தின், அரையாண்டு சீராய்வு மீதான விவாதத்தின் போது ஹடி அவாங் அதனைத் தெரிவித்தார்.
ஹடி அவாங்கிற்கு எதிரான விசாரணை அறிக்கை, தேசிய சட்டத் துறை அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக, தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரஸருடின் ஹுசைன் இதற்கு முன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.