
ஜகார்த்தா, மார்ச் 29 – சிறையில் தந்தையும் மகளும் ஒருவரையொருவர் ஆரத் தழுவி முத்தமிட்டு அரவணைத்துக் கொண்ட காட்சி, பலரின் மனதை உருக வைத்திருக்கின்றது.
அந்த சம்பவம், இந்தோனேசியா, Jambi-யிலுள்ள சிறைச்சாலையில் நிகழ்ந்த வேளை , அதனை படமெடுத்து போலீஸ் அதிகாரி ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டார்.
சம்பவத்தன்று அந்த சிறுமி சிறையில் இருக்கும் தனது தந்தையைப் பார்க்க வந்துள்ளார்.
ஆனால் அவர்களுக்கு இடையில் இருந்த சிறைக்கம்பிகளினால் தந்தையும் மகளும் கட்டிப் பிடித்து அன்பை பகிர்ந்து கொள்ள கஷ்டப்பட்டதைப் பார்த்து , தனது மனம் கனத்துப் போனதாக, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
அதையடுத்து அவ்விருவருக்கும் இடையில் தடையாக இருந்த சிறைக் கதவை திறந்து விட்டதாக அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.
இதனிடையே, சிறுமிக்காக சிறைக் கதவை திறந்து விட்டது தவறில்லை என இந்தோனேசிய போலீஸ் துறை தெரிவித்துள்ளது. போலீஸ் அதிகாரிகளின் கண்காணிப்பிலே அந்த சம்பவம் நிகழ்ந்ததால், அதில் எந்தவொரு பிரச்சனையும் இல்லையென அத்துறை குறிப்பிட்டது.