
ஷா ஆலம், ஆக 2- இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் பகுதி நேர வேலை வாய்ப்பு தொடர்பான 215 மோசடிச் சம்பவங்களில் 1 கோடியே 64 லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட் இழப்பு ஏற்படுள்ளதாக
சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ உசேய்ன் ஒமார் கான் தெரிவித்திருக்கிறார். கடந்தாண்டில் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் 660,127 வெள்ளி உள்ளடக்கிய 38 மோசடிக் சம்பவங்கள் பதிவாகின என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டினார். அடையாளம் தெரியாத தொலைபேசி எண்கள் வாயிலாக பகுதி நேர வேலை வாய்ப்பு தொடர்பான விளம்பரங்களை டெலிகிராம் அல்லது வாட்ஸ்ஆப் எனும் புலனம் வாயிலாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்புவது இக்கும்பலின் வழக்கமான பாணியாகும்.
அந்த விளம்பரத்தில் உள்ள இணைப்பைச் சொடுக்கி பயன்பாட்டாளர் பெயர் மற்றும் கடவுச் சொல்லை உள்ளிடும்படி அக்கும்பல் கேட்டுக் கொள்ளும். தொடக்கத்தில் இந்த இணைப்பில் உள்ள மின்-வர்த்தகத் தளத்தில் சிறிய தொகையில் ஏதாவது ஒரு பொருளை வாங்கும்படி பாதிக்கப்பட்டவர்கள் கேட்டுக் கொள்ளப்படுவர். தங்களின் உண்மையான ஈடுபாட்டை நிரூபிப்பதற்காக தங்கள் வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்தும்படி அக்கும்பல் கேட்டுக் கொள்ளும். இது தவிர கொள்முதல் செய்யும் பொருள்களின் தொகைக்கு ஏற்ப 10 முதல் 30 விழுக்காடு வரை கமிஷன் தொகை கிடைக்கும் என்றும் அக்கும்பல் ஆசை வார்த்தை கூறும் என்று அவர் கூறுவர் என அவர் கூறினார். பின்னர் அதிகத் தொகையிலான பொருள்களை மின்-வர்த்தகத் தளத்தின் வாயிலாக பொருள்களை வாங்கும்படி பாதிக்கப்பட்டவர்கள் கேட்டுக் கொள்ளப்படுவார்கள். குறிப்பிட்டபடி கமிஷன் தொகை கிடைக்காது போன பின்னரே தாங்கள் ஏமாற்றப்பட்டதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்வர் என்று உசேய்ன் தெரிவித்தார்.