
வரும் ஆகஸ்ட் 12-ல் நடைப்பெறவுள்ள மாநிலத் தேர்தல்களில் சிலாங்கூரை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ள பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி, இந்தியர்கள் மற்றும் பூர்வக்குடியினரின் சமூக பொருளாதார நிலையை உயர்த்திட சிறப்பு துறை ஒன்றை உருவாக்கவிருப்பதாக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.
அச்சிறப்பு துறைக்கு 50மில்லியன் ஒதுக்கப்படும் என்றும் அக்கூட்டணியின் தலைவர் டான் ஶ்ரீ முஹிடின் யாசின் அறிவித்துள்ளார்.
இந்தியர்களின் வாக்குகள் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்துரைத்துள்ள நிலையில் அவர்களின் வாக்குகளைப் பெற அக்கூட்டணி தற்போது பெரும் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
அதே சமயத்தில் “சிலாங்கூர் நல்லிணக்கம்” எனும் திட்டத்தின் கீழ் மாநில பல்லின மக்களிடையே நல்லிணக்கத்தைப் பேண அரசாங்கச் சார்பற்ற நிறுவனங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இவை பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி சிலாங்கூரை வென்றால் மொத்தமாக ஒதுக்கப்படவுள்ள 2 பில்லியன் ரிங்கிட்டின் ஒருப் பகுதி ஆகும்.
65000 குடும்பங்களுக்கு வீட்டு அத்தியாவசியப் பொருட்களை வாங்க மாதம் 400 ரிங்கிட் வழங்குவது, உயர் தொழில்திறன் தேவைப்படும் துறைகளில் 100,000 பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவது, 5000 ரிங்கிட்டிற்கும் குறைவான வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மருத்துவ மற்றும் சுகாதார பாதுகாப்பு திட்டங்கள் போன்றவை அக்கூட்டணியின் நேற்று வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்களாகும்.