
சிலாங்கூரில், மாநில தேர்தலை முன்னிட்டு, பாக்காதான் ஹரப்பானுக்கும், தேசிய முன்னணிக்கும் இடையில், தொகுதி பங்கீடு மீதான பேச்சு வார்த்தை 83 விழுக்காடு பூர்த்தியாகியுள்ளது.
தொகுதி பங்கீடு தொடர்பில், மத்திய அரசாங்க நிலையில் பலமுறை பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. கூடிய விரைவில் அதற்கு முழுமையாக தீர்வுக் காணப்படுமென, சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிரூடின் ஷாரி தெரிவித்தார்.
இதுவரை பேச்சு வார்த்தைகள் அனைத்தும் சுமூகமான முறையில் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு வழிவிடும் வகையில், மாநில அரசாங்கத்தை களைப்பதற்கு முன், தலைவர் மன்றம் அது குறித்து இறுதி முடிவுச் செய்யுமென அமிரூடின் சொன்னார்.
மாற்றம் இருந்தாலும் கூட, அது அவ்வளவு பெரிதாக இருக்காது என்றாரவர்.
இவ்வேளையில், கோத்தா கெமுனிங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.கணபதிராவ், அத்தொகுதியை தற்காத்து போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளதை தொடர்ந்து, பாக்காத்தான் ஹரப்பான் அத்தொகுதியில் போட்டியிடுமா என வினவப்பட்ட போது, ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதை போல, இதற்கு முன் வெற்றி பெற்ற அனைத்து தொகுதிகளையும் தற்காத்து பக்காதான் ஹராப்பான் கட்டாயம் போட்டியிடும் எனவும் அமிரூடின் தெரிவித்தார்.