ஷா ஆலாம், நவம்பர்-25 – சிலாங்கூர் வணிக வளாகங்களில் அடுத்தாண்டு தொடங்கி வெள்ளிக் கிழமை முதல் ஞாயிற்றுக் கிழமை வரை பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டுக்குத் தடை விதிக்க, மாநில அரசு உத்தேசித்துள்ளது.
பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அற்ற மாநிலமாக சிலாங்கூரை உருமாற்றும் முயற்சியே அதுவென, பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச் சூழல் துறைக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.
ஊராட்சி மன்ற அதிகாரத்தின் கீழ் அந்த உத்தேசத் திட்டத்தின் அமுலாக்கம் குறித்த விவகாரங்கள் தற்போது ஆராயப்பட்டு வருகின்றன.
அனைத்தும் சுமூகமானால், அடுத்தாண்டு அது நடைமுறைக்கு வரலாமென அவர் கோடி காட்டினார்.
‘சுழியம் பிளாஸ்டிக் பயன்பாட்டு’ இலக்கை அடைய மாநில அரசு எடுத்து வரும் முயற்சிகள் குறித்து சிலாங்கூர் சட்டமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போது, ஜமாலியா அவ்வாறு சொன்னார்.
சிலாங்கூரில் 2010-ஆம் ஆண்டு முதல் பல பேரங்காடிகள், சிற்றங்காடிகள், வணிகத் தளங்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஒவ்வொரு சனிக்கிழமையும் ‘ பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத நாள்’ அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அப்படியும் பிளாஸ்டிக் பை வேண்டுமென்றால், வாடிக்கையாளர்கள் தலா 20 சென் கட்டணம் செலுத்த வேண்டும்.
அதன் மூலம் வசூலாகும் தொகை மாநில சமூக நல அமைப்புகளுக்கோ, பயனீடு மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்புத் திட்டங்களுக்கோ பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.