
சிலாங்கூர் , ஜன 19 – சிலாங்கூரிலுள்ள வனப் பூங்காக்களும், நடைப்பயணம் மற்றும் மலையேறும் நடவடிக்கைகளுக்குப் பிரபலமான இடங்களும் பிப்ரவரி முதலாம் தேதி தொடங்கி பொதுமக்களுக்கு திறக்கப்படுமென, மாநில வனத்துறை தெரிவித்தது.
ஹூலு சிலாங்கூர் வனப்பகுதி, மத்திய சிலாங்கூர் வனம் மற்றும் கிள்ளான் கடற்கரை வனப்பகுதிகளிலுள்ள, ஆறு சுற்றுச்சூழல் வனப் பூங்காக்களும், மலையேறும் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் பாதைகளும் அதில் அடங்குமென, மாநில வனதுறை முகநூல் பதிவு வாயிலாக தெரிவித்தது.
அதே சமயம், மலையேறிகளின் வழிகாட்டிகள் அல்லது தன்னார்வலர்களின் சேவைகளும் அதே நாளில் மீண்டும் தொடங்கப்படும். அதனால், மலையேறும் நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புபவர்கள், அதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மோசமான வானிலை காரணமாக, சிலாங்கூரிலுள்ள அனைத்து வனப் பூங்காக்களும், மலையேறும் பகுதிகளும், முகாமிடும் தளங்களும் கடந்தாண்டு டிசம்பர் 17-ஆம் தேதி தற்காலிகமாக மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.