ஷா ஆலாம், மே 3 – கடந்த புதன்கிழமை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அறிவிப்பு ஏற்ப, சிலாங்கூர் மாநில அரசாங்கம், ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும்.
மத்திய அரசாங்க ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான சுற்றறிக்கை கிடைத்ததும், அந்த சம்பள ஒருங்கிணைப்பு செயல்படுத்தப்படும் என சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
இவ்வாண்டு டிசம்பர் முதலாம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள, அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த பிரதமரின் அறிவிப்பை சிலாங்கூர் மாநில அரசாங்கம் வரவேற்கிறது.
அதற்கு ஏற்ப, நடப்பு நிதி நிலவரத்தை கருத்தில் கொண்டு ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென அமிருடின் ஷாரி சொன்னார்.
அதே சமயம், சிலாங்கூர் மாநில அளவிலான சம்பள உயர்வு அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் இருக்க வேண்டும். அதனால், அரசாங்கத்தின் சேவை தரம் தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பணி உற்பத்தித்திறனும் பலப்படுத்தப்பட வேண்டுமென அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வாண்டு டிசம்பர் முதலாம் தேதி முதல் அரசாங்க ஊழியர்களுக்கு, 13 விழுக்காட்டிற்கும் மேல் சம்பள உயர்வு வழங்கப்படும் என்ற நற்செய்தியை, மே முதலாம் தேதி தொழிலாளர் தின வாழ்த்து உரையில் பிரதமர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.