ஷா அலாம், டிச 10 – அரசியல் உரையாற்றும் நிகழ்ச்சியில் சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷாவை தொடர்புப்படுத்திய நிந்தனை குற்றச்சாட்டிலிருந்து கெடா மந்திரிபுசார் சனுசி முகமட் நோரை ஷா ஆலாம் உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கும்படி சனுசி முறையிட்டதை தொடர்ந்து அவரது விளக்கத்தை சட்டத்துறை தலைவர் அலுவலகம் ஏற்றுக்கொண்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்ததை தொடர்ந்து இந்த முடிவுக்கு வருவதாக நீதிபதி அஸ்லாம் ஜைனுடின் தெரிவித்தார்.
எனினும் 16ஆவது பேரரசர் அல் சுல்தான் அப்துல்லாவை நிந்தனைப்படுத்தியதாக சனுசி மற்றொரு குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார். இந்த குற்றச்சாட்டு மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் 28ஆம் தேதிவரை நடைபெறும் என அரசு தரப்பு துணை வழக்கறிஞர் டத்தோ மஸ்ரி முகமட் நீதிபதி டத்தோ அஸ்லாம் ஜைனுடின் முன்னிலையில் தெரிவித்தார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி இரவு 11 மணியளவில் தாமான் செலயாங் முத்தியாரா- கம்போங் பென்டெஹாராவில் முகமட் சனுசி இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது. குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் 5,000 ரிங்கிட்வரை அபராதம் அல்லது கூடியபட்சம் மூன்று ஆண்டுகள் சிறை அல்லது இவ்விரண்டும் விதிக்கப்படும் 1948ஆம் ஆண்டின் நிந்தனை சட்டத்தின் 4 (1) ( b) விதியின்
கீழ அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.