
கோலாலம்பூர், நவ 6 – சிலாங்கூர் மற்றும் பேராவில் 9 தற்காலிக நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. சிலாங்கூரில் சிப்பாங் மாவட்டத்தில் நேற்று மாலை மணி 3 முதல் தொடர்ந்து பெய்த மழையினால் ‘டெங்கில்’ ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடியதில் ஐந்து நிவாரண மையங்கள் திறக்கப்பட்டன.
67 குடும்பங்களைச் சேர்ந்த 255 பேர் கம்போங் டாத்தொக் அஹ்மட் ரஜாளி, தாமான் கெமிலாங் மற்றும் ஜெண்டராம் ஹீலிர் கிராம மேம்பாட்டு நிர்வாக மன்ற மண்டபத்தில் தங்கியுள்ளனர். டெங்கில் சமூக மண்டபம் மற்றும் டெங்கில் இடைநிலைப் பள்ளி மண்டபத்திலும் மேலும் பலர் தங்கியுள்ளதாக சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி வான் கமாருள் அஸ்ரான் வான் யூசோப் கூறினார்.
பேராவில் வெள்ளத்தினால் நிவாரண மையங்களில் இன்னமும் 220 பேர் தங்கியுள்ளனர். வெள்ளத்தினால் வெளியேற்றப்பட்டவர்கள் ஹீலிர் பேரா மற்றும் கிரியானில் உள்ள நான்கு நிவாரண மையங்களில் அவர்கள் தங்கியிருப்பதாக பேரா மாநில பேரிடர் நிர்வாக செயலகம் வெளிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.