
கோலாலம்பூர், நவ 20 – கோலாலம்பூரில் உள்ள சீன முஸ்லீம் உணவகம் ஒன்றில் பணிபுரியும் நபர் சிலுவை அணிந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அந்த ஊழியரை பணிநீக்கம் செய்த உணவக உரிமையாளரை நெட்டிசன்கள் கடுமையாக சாடினர். உணவகத்தின் மிருதுவான இறைச்சி நிரப்பப்பட்ட ரொட்டியை தயாரிக்கும் காட்சியை கொண்ட காணொளியில் காணப்படும் அந்த தொழிலாளிக்கு நெட்டிசன்கள் தங்களது அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவித்துக் கொண்டனர். அந்த ஊழியரை பணிநீக்கம் செய்த முடிவு சரியானது அல்ல. மேலும் சிலுவையை அணிந்து கொண்டிருப்பதால் பரிமாறப்படும் உணவின் ஹலால் நிலைக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என நினா’ஸ் நஸ்ரி என்பவர் டுவிட் செய்துள்ளார். ஊழியர் உணவு தயாரிப்பதில் எந்த விதிகளையும் மீறவில்லை என்றால், அவர் ஏன் நீக்கப்பட வேண்டும் . தயவு செய்து மக்களை மோசமாக நடத்தாதீர்கள்” என்று ரோஸ் நோர் என்பவர் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் ஊழியர் முஸ்லிமல்லாதவராக இருப்பதில் எந்தத் தவறும் இல்லை என்பதோடு அவர் மீது பரிதாபப்படுகிறேன் என மலாய் பிட்காயினர் என்பவர் தெரிவித்திருக்கிறார். அந்த ஊழியர் தனது முன்னாள் முதலாளி மீது மத பாகுபாட்டிற்காக வழக்குத் தொடரலாம் என்று மஞ்சிட் சிங் என்பவர் தெரிவித்துள்ளார். மற்றவர்கள் இது நியாயமற்ற பணிநீக்கம் என்றும் தெரிவித்துள்ளனர். இதனிடையே அந்த ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்று சோபியா என்று அடையாளம் கூறிக்கொண்ட அந்த அந்த உணவகத்தின் நிர்வாகி தெரிவித்துள்ளார். அதோடு இந்த விவகாரம் தொடர்பில் நெட்டிசன்களிடம் அந்த நிர்வாகி மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.