
சுங்கை பூலோ, ஜன, 31- சிவப்பு அடையாள அட்டை வைத்திருக்கும் மூத்தக் குடிமக்களின் விவகாரம் தொட்டு மக்களவையில் தாம் பேசவிருப்பதாக சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
நெடுங்காலமாக இருந்து வருகின்ற இந்த சிவப்பு அடையாள அட்டை விவகாரத்திற்கு உரிய தீர்வை கொண்டுவரும் முறைகளை முறையே ஆராய வேண்டியிருக்கின்றது.
ஆதலால், இவ்விவகாரத்தை மக்களவையின் பார்வைக்குக் கொண்டுச் செல்ல தாம் எண்ணம் கொண்டிருப்பதாக பிகேஆர் கட்சியின் தகவல் பிரிவு துணைத் தலைவருமான டத்தோ ரமணன் குறிப்பிட்டார்.
மேலும், கடந்தாண்டு செப்டம்பரில் இந்திய மக்களுடனான சிறப்பு மாநாட்டில் உரையாற்றியபோது, அக்கூட்டத்திற்கு தலைமையேற்றிருந்த டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் , இந்த சிவப்பு அடையாள அட்டை பிரச்சினையை தாம் நிச்சயம் கவனிப்பதாக கூறியிருந்ததாக டத்தோ ரமணன் தெரிவித்தார்.
நேற்று முன்தினம், சுங்கை பூலோ, புக்கிட் ரஹ்மான் புத்ராவில் அத்தொகுதி மக்கள் சேவை மையத்தின் ஆதரவில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட டத்தோ ரமணன் செய்தியாளரிடம் இதனைத் தெரிவித்தார்.