
கோலாலம்பூர், மார்ச் 10 – சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இந்நாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் செயல்படுகின்றன. தாய்மொழிப் பள்ளிகளுக்கு தங்களது பிள்ளைகளை இந்தியர்களும் சீனர்களும் அனுப்புவதால் அவர்களுக்கு தேசிய உணர்வு இல்லை என்ற தோற்றத்தில் டாக்டர் மகாதீர் கேள்வி எழுப்புவது ஏற்புடையதாக இல்லையென பினாங்கு துணை முதலைமைச்சர் டாக்டர் ராமசாமி தெரிவித்துள்ளார்.
இன பாகுபாட்டினால்தான் மலாய்க்காரர் அல்லாத பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை தாய்மொழிப் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். இந்த பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை தேசிய பள்ளிக்கு அனுப்பாமல் ஏன் தாய்மொழிப் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர் என்பதை டாக்டர் மகாதீர் ஆராய வேண்டும் என ராமசாமி கேட்டுக்கொண்டார்.
தேசிய பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக கல்வித் தரம் குறைந்து வருகிறது. மலாய்க்கார பெற்றோர்களில்கூட 20 விழுக்காட்டினர் தங்களது பிள்ளைகளை சீனப் பள்ளிக்கு அனுப்புகின்றனர்.
அப்படியானால் அவர்கள் தேசிய உணர்வு குறைந்தவர்களாக இருக்கின்றனரா என்றும் தமது முகநூலில் வெளியிட்ட அறிக்கையில் ராமசாமி வினவினார். எல்லாவற்றுக்கும் மேலாக கல்வி முறை செயல்பாட்டின் முன்னேற்றத்தில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தவில்லை என்று கூறினால் டாக்டர் மகாதீர் அதனை ஒப்புக்கொள்ள மாட்டார். அவர் மலாய்க்கார்கள் அல்லாதாரைத்தான் தொடர்ந்து குறைகூறி வந்தாரே தவிர கல்வி முறையை மேம்படுத்துவதில் கவனம செலுத்தவில்லை என்றும் ராமசாமி தெரிவித்தார்.