Latestஉலகம்

சீனாவில் ஒதுக்கப்படும் முன்னாள் Covid-19 நோயாளிகள்

பெய்ஜிங், ஆகஸ்ட் 12 – சீனாவில் Covid-19 நோய்த்தொற்றுக்கு ஆளாகிக் குணமடைந்தவர்களை, சமூதாயத்தினர் மீண்டும் தங்களோடு சேர்த்துக் கொள்ளத் தயங்குவது கண்டறியப்பட்டுள்ளது.

நோயிலிருந்து குணமடைந்து விட்ட பின்பும், மற்றவர்கள் தங்களை எய்ட்ஸ் நோயாளியைப் பார்ப்பது போல் ஒதுக்குவதாக, பாதிக்கப்பட்ட மக்கள் கூறியிருக்கின்றனர். இதனால் நோயிலிருந்து குணமடைந்த பெரும்பாலானவர்கள், மீண்டும் தங்களால் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியவில்லை எனக் கூறி வருந்தினர்.

ஷாங்ஹாய் (Shanghai)யிலுள்ள தனிமைப்படுத்தல் மையமொன்றில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்து கொண்டிருந்த போது தமக்கு Covid-19 தொற்று ஏற்பட்டதாக ஸுவோ (Zuo) எனும் பெண்மணி ஒருவர் கூறினார். நோய்ப் பிடித்ததும் தாம் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டதாகக் கூறிய அப்பெண், நோய் குணமடைந்து 4 மாதங்கள் கடந்து விட்ட போதும் இன்னும் தமக்கு வேலை கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.

குணமடைந்து விட்டாலும் நோய்க்கிருமி இன்னும் தங்களிடம் இருக்கும் என்ற அச்சத்தில் மற்றவர்கள் தங்களை வெறுத்து ஒதுக்குவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருப்பதாக அப்பெண் கூறினார்.

இந்நிலையில் சீனாவில் பரவலாகக் காணப்படும் இத்தகைய பாகுபாட்டினால் ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தவிப்பதாக அங்குள்ள மனித உரிமை அமைப்புகள் சாடியிருக்கின்றன. அதோடு, நோயில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களை மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினர், அண்டை வீட்டார், நண்பர்கள் போன்றோரையும் மற்றவர்கள் ஒதுக்கும் போக்கு அதிகரித்திருப்பதாக அவ்வமைப்பினர் கூறியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!