பெய்ஜிங், ஆகஸ்ட்-12, சீனாவில் கொளுத்தும் வெயில் மனிதர்களை மட்டுமல்ல; இயந்திரங்களையும் விட்டு வைக்கவில்லை.
அதீத உஷ்ணத்தால் கார்கள் கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைப் போல் பெரிதாகியுள்ள வீடியோக்களும் புகைப்படங்களும் வைரலாகியுள்ளன.
பொதுவெளியில் வைக்கப்பட்டுள்ள பல கார்கள் அப்படி ‘வயிறு’ பெரிதாகியிருப்பதை அவ்வீடியோக்களில் காண முடிகிறது.
பார்த்தவுடன் ஆச்சரியத்துடன் சிரிப்பையும் வரவழைக்கும் அக்கார்களுக்கு, நெட்டிசன்கள் ‘கர்ப்பிணி கார்கள்’ என பெயர் வைத்துள்ளனர்.
இன்னும் சில இணையவாசிகளோ, உள்ளூர் கார்களுக்கு மட்டுமே அப்பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.
என்றாலும், வெளிநாட்டு கார்களும் அப்பிரச்னையை எதிர்நோக்கியிருப்பதை வீடியோக்களில் காண முடிகிறது.
உண்மையில், கார்களில் பூசப்பட்ட சாயத்தைப் பாதுகாக்கும் ஸ்டிக்கர்களில் (sticker) இருக்கும் வாயுவும் காற்றும், அதீத உஷ்ணத்தில் சிக்கி விரிவடையும் போது அச்சிக்கல் ஏற்படுகிறது.
இதனால் வித்தியாசமான குமிழ்கள் உருவாகி, பார்ப்பதற்கு கார் வீங்கிய வயிறுப் போல் இருப்பதாகக் கூறப்படுகிறது.