பெய்ஜிங், ஆகஸ்ட் 28 – சீனாவில் தனது மகனை விமானத்திலுள்ள பயணிகளை இடையூறு செய்வதற்கும், விமானத்தின் முதல் வகுப்புக் கேபினில் நுழைய விட்டதற்கும், தாய் ஒருவரைப் பொதுமக்கள் கடிந்து வருகின்றனர்.
விமானத்தில் இருக்கை மிகவும் குறுகலாக இருப்பதாக அவரது மகன் அழுத காரணத்தால், மீண்டும் இருக்கைக்குத் திரும்ப வேண்டும் என்ற விமானப் பணிப்பெண்ணின் கோரிக்கையை, அந்த தாய் அலட்சியம் செய்து, முதல் வகுப்பு அறைக்குள் செல்ல அனுமதித்துள்ளார்.
‘அங்கே ஒரு இருக்கை காலியாக உள்ளது. ஏன் என் மகன் உட்கார விடக்கூடாது’ என அந்த தாய் விமானப் பணிப்பெண்ணிடம் செய்த வாக்குவாதம் சமூக ஊடகங்களில் வைரலான காணொளியில் காணமுடிகிறது.
மற்ற பயணிகள் இந்த சம்பவத்தால் அதிருப்தியடைய, கோபத்தில் விமானத்தை விட்டு அவர்களை இறங்க கூறுவதையும் அந்த காணொளியில் கேட்க முடிகிறது.
கடந்த ஆகஸ்ட் 15ஆம் திகதி, நடந்தேறிய இந்த சம்பவத்தால், அந்த விமானம் ஒரு மணிநேரம் தாமதமாகப் புறப்பட்டது.
இதனிடையே, இந்த தாயின் நடத்தை சீன சமூக ஊடகங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
‘சிறையில் நிறையக் காலியிடங்கள் உள்ளன. அவர் அங்கு உட்காரலாம்’ என்று நெட்டிசன் ஒருவர் பதிவிட்ட கருத்து அதிக likes-களை குவித்து வருகிறது.