சூ’ஹாய்(சீனா), நவம்பர்-13 – தென் சீனாவின் சூ’ஹாய் (Zhuhai) நகரில் விளையாட்டு மையமொன்றை கண்மூடித்தனமாகக் கார் மோதியதில், அங்கு உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 43 பேர் காயமடைந்தனர்.
எனினும் காயமடைந்தவர்களின் நிலைமை ஆபத்தாக இல்லை என தெரிவிக்கப்பட்டது.
திங்கட்கிழமை நிகழ்ந்த அச்சம்பவத்தில் சிலர் காயமடைந்ததாக மட்டுமே போலீஸ் கூறியிருந்த நிலையில், சம்பவ வீடியோக்கள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியதும் ஒரு நாள் கழித்து மரண எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தரையில் பலர் பேச்சு மூச்சின்றி விழுந்துகிடப்பதும், அவர்களைத் தட்டியெழுப்ப மற்றவர்கள் அங்குமிங்கும் ஓடுவதும் வைரலான வீடியோக்களில் தெரிகிறது.
பெரும் விபத்தை ஏற்படுத்திய 62 வயது ஆடவர், காருக்குள் தன்னைத் தானே கத்தியால் வெட்டியும் கழுத்தில் கீறியும் கொண்டார்.
போலீஸ் அவரைத் தடுத்து நிறுத்தி மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அதிக இரத்த இழப்பால் அவர் கோமாவுக்குச் சென்று விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மனைவியுடன் ஏற்பட்ட விவாகரத்தால் அண்மையக் காலமாகவே அவர் பெரும் விரக்தியிலிருந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
காயமடைந்தவர்களுக்கு முழு வீச்சில் சிகிச்சையளிப்பதோடு, சம்பவத்துக்குக் காரணமானவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு சீன அதிபர் Xi Jinping உத்தரவிட்டுள்ளார்.