
புத்ராஜெயா, ஏப்ரல்-16, மலேசியாவுக்கான தனது 3 நாள் வருகை இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துமென, சீன அதிபர் சீ சின் பிங் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இன்னொரு 50 ஆண்டு பொன்விழாவைத் தொடுவோம் என்றார் அவர்.
“இந்தப் பயணத்தின் மூலம் நமது பாரம்பரிய நட்பை ஆழப்படுத்தவும், அரசியல் நம்பிக்கையை அதிகரிக்கவும், பரஸ்பர கற்றலை மேம்படுத்தவும், சீன-மலேசிய சமூகத்தை பகிரப்பட்ட எதிர்காலத்துடன் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை அதிகரிக்கவும் முடியுமென நான் நம்புகிறேன்”
கூட்டு ஒத்துழைப்பின் வாயிலாக இப்பயணம் நிச்சயம் பயனுள்ளதாக அமையுமென, KLIA-வில் நேற்று மாலை வந்திறங்கியதும் வெளியிட்ட அறிக்கையில் அவர் சொன்னார்.
சீனா-மலேசியா இடையிலான அரச தந்திர உறவு கடந்தாண்டு 50-ஆவது பொன்விழாவைக் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
12 ஆண்டுகள் கழித்து மலேசியாவுக்குத் திரும்பியுள்ளது குறித்து மகிழ்ச்சித் தெரிவித்த சீ சின் பிங், அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்த மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுக்கு நன்றித் தெரிவித்துக் கொண்டார்.
அவருடனும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடனும் இருவழி உறவு குறித்தும் வட்டார மற்றும் உலக நடப்பு தொடர்பிலும் கருத்துப் பரிமாற்றம் செய்யயவிருப்பதாக அவர் சொன்னார்.
முன்னதாக Air China தனி விமானத்தில் KLIA வந்திறங்கிய சீன அதிபரை, டத்தோ ஸ்ரீ அன்வாரே நேரில் எதிர்கொண்டு வரவேற்றார்.
பரஸ்பர வரி விதிப்பால் அமெரிக்கா – சீனா இடையில் வர்த்தகப் போர் முற்றியிருக்கும் நேரத்தில், சீ சின் பிங் மலேசியா வந்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.