
சீனாவிலிருந்து வருகை புரியும் சுற்றுப் பயணிகள், வேலை அனுமதியை வைத்திருப்பவர்களுக்கு எதிராக புதிய விதிமுறை எதையும் சிங்கப்பூர் விதிக்காது என அந்நாட்டு சுகாதார அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
வெளிநாட்டிற்கு சுற்றுலா மேற்கொள்ள சீன மக்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. எனினும், இரு தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும் என்பதோடு, பயணத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன் அவர்கள் கோவிட்-19 நோய்தொற்றுக்கான சோதனையை செய்துக் கொண்டிருக்க வேண்டும். அதே சமயம், குறுகிய கால பயணம் மேற்கொள்பவர்கள் காப்புறுதியை பெற்றிருக்க வேண்டும்.
சீனாவில் மீண்டும் அதிகரித்து வரும் கோவிட்-19 பெருந் தொற்றை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நாட்டு பயணிகளுக்கு எதிராக, ஜப்பான், அமெரிக்கா உட்பட மேலும் சில நாடுகள் விதித்து வரும் புதிய விதிமுறைகள் குறித்து சிங்கப்பூர் அவ்வாறு கருத்துரைத்தது.
சீனாவில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதை அடுத்து, தொற்று பரவல் மோசமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.