பெய்ஜிங், செப்டம்பர் -21 – இதுநாள் வரை சுற்றுப் பயணிகளை அதிகம் கவர்ந்த 2 பாண்டா கரடிக் குட்டிகள், உண்மையில் சாயம் பூசப்பட்ட நாய்கள் என்பதை சீனாவில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலை ஒப்புக் கொண்டுள்ளது.
பாண்டா கரடிகள் இல்லாததால், வருகையாளர்கள் ஏமாற்றமடைவதைத் தவிர்க்க நாய் குட்டிகளுக்கு ‘மாறுவேடம்’ போட்டு காட்சிக்கு வைத்ததாக அதன் நிர்வாகம் விளக்கியது.
பஞ்சுபோன்ற தோலைக் கொண்ட இரு chow chow ரக நாய் குட்டிகள், அண்மையில் அங்கு வந்த சுற்றுப்பயணி ஒருவரது கேமராவில் சிக்கின.
‘பாண்டா கரடிக்’ குட்டிகளிடமிருந்து நாய் குரைக்கும் சத்தம் வந்ததால் சந்தேகம் வந்து, அந்நபர் வீடியோவாக பதிவுச் செய்து அதனை வைரலாக்கினார்.
சீனாவில் பாண்டா கரடிகள் போலவோ அல்லது மற்ற வன விலங்குகள் போலவோ காட்சியளிக்க, நாய்களுக்கு சாயம் பூசப்படுவது இதுவொன்றும் முதல் முறையல்ல.
ஏற்கனவே கடந்த மே மாதம் Jiangsu மாநிலத்தில் 2 நாய்களுக்கு பாண்டா கரடிகள் போல் கறுப்பு மற்றும் வெள்ளை நிற சாயம் பூசப்பட்ட சம்பவம் அம்பலமானது.
2019-ல் நவீன காப்பிக் கடையொன்றில் (cafe) நாய்களுக்கு பாண்டா கரடிகளைப் போலவே சாயம் பூசப்பட்டதும் வைரலானது.