Latestமலேசியா

சீபில்ட் ஆலயத்தில் கட்டைகளுடன் 200 பேர் முற்றுகையிட்டனர் – நாகராஜூ சாட்சியம்

பெட்டாலிங் ஜெயா, அக் 14 – சுபாங் ஜெயா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் சுமார் 200 பேர் கையில் கட்டைகளுடன் அத்துமீறி நுழைந்ததாக மாஜிஸ்திரேட் நீதிமன்தில் அந்த ஆலயத்தின் நிர்வாகக் குழுத் தலைவரான நாகராஜூ சாட்சியம் அளித்தார். அவர்கள் அந்த ஆலயத்தை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் நோக்கத்தில் அங்கு அத்துமீறி நுழைந்தனர் என அவர் கூறினார்.

அவர்களது அந்த நடவடிக்கையினால் ஆலயத்தில் இருந்த 200க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் நாற்காலிகள், ஆலய மண்டபத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததோடு ஆலய வளாகத்தில் இருந்த மூன்று வாகனங்களும் சேதமடைந்ததாக அவர் கூறினார். சீபில்ட் ஆலயத்தில் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டதாக 17 ஆடவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணையில் அரசு தரப்பின் 10 சாட்சியான நாகராஜூ சாட்சியம் அளித்தார். ஆலயத்தின் பின்வழியாக அத்துமீறி நுழைந்த 200 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒரு மேம்பாட்டு நிறுவனத்திற்காக அந்த ஆலயத்தை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நோக்கத்தில் ஆலயத்திற்குள் இருந்த பக்தர்களை வெளியேற்றுவதற்கு அங்கு வந்ததாக அவர் தெரிவித்தார்.

அப்போது அந்த ஆலயத்திற்குள் என்னுடன் சேர்ந்த 20 பேர் இருந்தோம். அவர்கள் எங்கள் அனைவரையும் ஆலயத்திலிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டனர் என அரசு தரப்பின் துணை வழக்கறிஞர் நதஷா அஸ்மியின் கேள்விக்கு சாட்சியம் அளித்தபோது நாகராஜூ தெரிவித்தார். எவரும் காயம் அடைவதை பார்க்க தாம் விரும்பவில்லை என்பதால் எந்தவொரு ஆட்சேபம் தெரிவிக்காமல் அங்கிருந்து வெளியேறும்படி பக்தர்களை தாம் கேட்டுக்கொண்டதாக 66 வயதுடைய நாகராஜூ கூறினார். எனினும் மேம்பாட்டு நிறுவனமாக ஒன் சிட்டி சென்.பெர்ஹாட்டை பிரதிநிதிப்பாக நம்பப்படும் இரண்டு ஆடவர்கள் திடீரென வாகனத்தில் அங்கு வந்தனர். ஆலயத்தில் இருந்த ஆறு பக்தர்களை தடுத்து நிறுத்தும்படி ஆலயத்தில் நுழைந்தவர்களை கேட்டுககொண்டனர். ஆலய மண்டபத்திற்குள் எங்களை செல்லும்படி கூறிய அவர்கள் பின்னர் எங்களை அங்கு தடுத்து வைத்தனர்.

அதன் பிறகு அதிகாலை 4 மணியளவில் ஆலயத்திற்கு வந்த போலீசார் 17 ஆடவர்களை கைது செய்தனர். அங்கு முற்றுகையிட்டிருந்த இதர அனைவரும் தப்பிச்சென்றனர். சில தனிப்பட்ட நபர்களுடன் அதிகாலை மணி 12.30 அளவில் நான் ஆலயத்தின் சமையல் கூடத்தில் இருந்தேன். சுவாமி ஐயப்பன் பக்தர்கள் பின்னர் வருவார்கள் என்பதால் அவர்களுக்காத தாம் சமைத்துக் கொண்டிருந்ததாக நாகராஜூ தமது சாட்சியத்தில் தெரிவித்தார். அன்றைய தினம் ஆலயத்தில் முற்றுகையிட்ட கும்பல் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றும் அவர்கள் அதிகமாக இருந்ததோடு மூன்று ஆண்டுகளுக்கு முன் அந்த சம்பவம் நடந்ததால் சரியாக ஞாபகம் இல்லையென்றும் அவர் கூறினார்.

எனினும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான முகமட் சைபுல்லா அப்துல்லா ஆலயத்தில் இருந்ததை தம்மால் அடையாளம் காட்ட முடிந்ததாக அவர் தெரிவித்தார். அதோடு ஆலயத்திற்குள் அத்துமீறி நுழைந்த கும்பலில் இந்தியர்கள் மற்றும் சீனர்கள் இருந்தனரா என எதிர்தரப்பு வழக்கறிஞர் முகமட் ஷாரில் கேட்டபோது அதை தம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று நாகராஜூ பதில் அளித்தார். 23 முதல் 46 வயதுடைய 17 நபர்கள் கலவரம் புரிந்தது மற்றும் ஆபத்தை விளைவிக்கும் ஆயுதங்களை வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர், நவம்பர் 26ஆம் தேதி அதிகாலை 2 மணி முதல் விடியற்காலை 5 மணிவரை அவர்கள் இக்குற்றத்தை புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!