
கோலாலம்பூர், மே 19 – கம்போடியாவில் நடந்து முடிந்த சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியாவின் மோசமான அடைவு நிலை அல்லது வீழ்ச்சிக்கு நாட்டில் ஏற்பட்ட அரசியல் நிலைத்தன்மையற்ற போக்கே காரணம் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்துள்ளார். 11 நாடுகள் கலந்துகொண்ட சீ போட்டியில் 40 தங்கப் பதக்க இலக்கை பெறுவதில் மலேசியா தோல்வி கண்டதோடு 34 தங்கம், 45 வெள்ளி மற்றும் 97 வெண்கலப் பதக்கங்களை வென்று ஏழாவது இடத்தையே பெற்றது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ஒரு ஆண்டுக்குள் பல அமைச்சர்கள் மாறியுள்ளனர். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று பக்காத்தான் ஹராப்பான் அதிகாரத்திற்கு வந்தது முதல் நான்கு அரசாங்கங்கள் மாறியுள்ளன. விளையாட்டுத்துறைக்கு நீண்ட கால திட்டங்களும், செயல்முறை வியூகங்களும் முறையாக அமல்படுத்தப்படவில்லையென ஹன்னா இயோ சுட்டிக்காட்டினார். அமைச்சுக்கு புதிய பட்ஜெட் கிடைப்பதற்கு முன்னதாகவே அமைச்சர்கள் மாற்றப்பட்டனர். எனினும் இளம் விளையாட்டாளர்களை உருவாக்குவதற்கு நாம் முதலீடு செய்துள்ளோம். மலேசியாவைச் பொறுத்தவரை இது சரியான நடவடிக்கை என்றுத்தான் சொல்ல வேண்டும் என அவர் கூறினார் . தங்கப் பதக்க இலக்கை மலேசிய விளையாட்டாளர்கள் நிறைவு செய்யாவிட்டாலும் 8 வெள்ளி மற்றும் 32 வெண்கலப் பதக்கம் நமது இலக்காக இருந்தன. ஆனால் கூடுதலாக 40 பதக்கங்களை மலேசிய குழுவினர் பெற்றனர் என ஹன்னா இயோ கூறினார்.