
கெடா, ஜனவரி 28 – அண்மையில், சுங்கைப் பட்டாணியில் பிரபலமான பத்து டுவா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் பதிவு ரத்து செய்யப்பட்ட தகவல் அங்குள்ள பக்தர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி ஆலயத்தின் பதிவு ரத்து செய்யப்பட்டது உண்மை என்றும், அதற்கான காரணத்தையும் விளக்கம் அளித்திருக்கிறார் ஆலய தலைவர் செல்லதுரை தங்கவேலு.
இந்த பதிவு ரத்தானது, ஆலயத்தின் வருடாந்திர அறிக்கை மற்றும் கூட்ட அறிக்கைகளை நேரத்தில் சமர்ப்பிக்காத செயலாளரின் கவனக்குறைவினால் ஏற்பட்டது என அவர் குறிப்பிட்டார்.
ஆலயத்தின் அறிக்கையைச் சமர்ப்பிப்பது செயலாளரின் பொறுப்பாகும். ஆனால், செயலாளர் தனது கடமையில் கவனமாக இல்லாமல் மற்ற பொறுப்புகளில் அதிகம் கவனம் செலுத்தியதால், இந்த பிரச்சனைகள் மேலோங்கியதாக அவர், கூறினார்.
எனினும் இந்த பிரச்சனைகளுக்குப் பதிலாக, அவர் அரசாங்க அதிகாரிகளிடம் முறையான முறையீடு செய்து, நிலைமையைச் சரிசெய்யும் முயற்சிகளை எடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் செல்லதுரை.
இதனிடையே, இப்பிரச்சனைகள் நிலவி வந்தாலும், ஆலயத்தில் தற்போது அனைத்து நடவடிக்கைகளும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.
எனவே பக்தர்கள் தயக்கம் இன்றி ஆலயத்திற்கு வரலாம். ஆனால், தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்; அதற்குச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் அவர் கூறியுள்ளார்.