
கோலாலம்பூர், ஜூன் 2 – அண்மையில் கும்பாபிஷேகம் கண்ட சுங்கைவே ஸ்ரீ சக்தி ஈஸ்வரி ஆலய கோபுரத்தில் சினிமா நட்சத்திரங்களின் சிலை வடிவங்கள் இருப்பதாக சமூக வலைத்தலங்களில் வெளியாகிவரும் தகவல்களை அந்த ஆலயத்தின் தலைவர் செல்வம் பரம் வணக்கம் மலேசியாவிடம் மறுத்தார். 15 ஆண்டு காலமாக கோபுரத்தில் அந்த சிலைகள் இருந்துவருகின்றன . ஆனால் திடீரென ரஜினி காந்த் , கமல், நடிகை நயன்தாரா போன்ற நட்சத்திரங்களின் சிலைகள் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் சிலர் குரல் பதிவு செய்து வருவது குறித்து செல்வம் பரம் வருத்தம் தெரிவித்தார்.
இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர்கூட மலேசியா இந்துச் சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ மோகன் ஷன் இது குறித்து என்னிடம் விளக்கம் கேட்டார். அவருக்கும் விளக்கம் தெரிவித்துள்ளேன். நடப்பு தலைவர் தங்க கணேசனுக்கும் விளக்கம் தெரிவித்துள்ளேன். இருப்பினும் இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பூதாகரமாக வெடித்துள்ளதால் நாங்கள் இதனை தீர்ப்தற்கு சில ஆலோசனைகளை பரிசீலித்து வருகிறோம். இந்த ஆலயம் அண்மையில்தான் கும்பாபிஷேகம் கண்டுள்ளதால் உடனடியாக அந்த சிலைகளை அகற்ற முடியாது, எங்களுக்கு மூன்று மாதங்கள் அவகாசம் கொடுங்கள் . சிற்பிகள் இந்தியாவுக்கு சென்றுள்ளனர். அவர்கள் திரும்பி வந்தவுடன் தீர்வுக்கான உடனடி நடவடிக்கையில் ஈடுபடுவோம் என செல்வம் பரம் கூறினார். இந்த விவகாரம் தொடர்பில் ஆலய தலைவர் வருத்தம் தெரிவித்ததோடு இப்பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வு காணப்படும் என்று உறுதியளிதிருந்ததாகவும் தங்க கணேசனும் வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.