
சிலாங்கூர், ஷா ஆலாம், சுங்கை கோங் ஆற்றில், டீசல் கசிவால் ஏற்பட்டதாக நம்பப்படும் துர்நாற்றத்தை, ரோந்து நடவடிக்கை வாயிலாக கண்டறிந்து, உடனடியாக சரிசெய்தது LUAS – சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம்.
நேற்று பிற்பகல் மணி 1.30 வாக்கில், 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வரும், LUAS-சின் அதிரடி படை அந்த தூய்மைக்கேட்டை கண்டறிந்ததாக, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் தெரிவித்தார்.
சம்பவ இடத்திலிருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில், ஆற்றின் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மண்வாரி இயந்திரத்திலிருந்து டீசல் கசிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
அதனை தொடர்ந்து, நீர் சுத்திகரிப்பும், விநியோகமும் தடைபடாமல் இருப்பதை உறுதிச் செய்ய, அந்த மண்வாரி இயந்திரத்தை உடனடியாக அங்கிருந்து அகற்ற உத்தரவு பிறபிக்கப்பட்டதோடு, மாசடைந்த ஆற்று நீரை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக,ஹீ லோய் சியான் சொன்னார்.
சிலாங்கூர் அரசாங்கம், LUAS உதவியுடன், நீர் விநியோகம் தடையின்றி சீராக இருப்பதை உறுதிச் செய்ய, முழுக் கடப்பாட்டுடன் செயல்பட்டு வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.