
வணிக ஈடுபாடு கொண்ட சமூகத்தை உருவாக்குவது என்பது சாதாரண காரியம் அல்ல. நடுத்தர மற்றும் பெரிய அளவிலான வணிகங்களுக்கு ஆதரவும் ஆலோசனையும் வழங்க பல அமைப்புகள் உள்ளன.
ஆனால் சிறு மற்றும் குறு வணிகர்கள் இதிலிருந்து பல சமயங்களில் விடுபட்டு விடுகிறார்கள். அவர்களைப் போன்றோருக்கு ஆதரவும் சந்தை வாய்ப்பை விரிவுப் படுத்தும் நடவடிக்கைகளையும் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் தொடங்கப்பட்ட அமைப்புதான் வணிகக்களம் மலேசியா வர்த்தக சபை. நாடு முழுக்க சுமார் 1800 வணிகர்களை உற்றுப்பினர்களை கொண்டுள்ள இச்சபை வணிகத் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் வளர்ந்துக் கொண்டிருக்கின்றனர்.
சிறு மற்றும் குறு வணிகர்களுக்கான அனைத்து வணிக யுக்திகளையும் இச்சபை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே அடுத்த முன்னெடுப்பாக, சுங்கை சிப்புட்டில் மக்கள் வணிகச் சந்தை எனும் மாபெரும் வியாபார சங்கமத்தை ஏற்பாடு செய்துள்ளது. எதிர்வரும் அக்டோபர் 6,7,8ஆம் திகதிகளில் சுங்கை சிப்புட் dewan arena MPKKல் நடைபெறவிருக்கிறது.
பேராக்கைச் சார்ந்த வணிகர்கள் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள வணிகர்கள் இந்த வணிகர் பெருவிழாவில் கலந்துக் கொள்ள அழைக்கப்படுகிறார்கள். 50க்கும் மேற்பட்ட வணிக முகப்புகளைக் கொண்டுள்ள இவ்வணிக விழாவில் பல வகையான வியாபாரங்கள், சேவைகள் என பலர் தங்களின் வியாபாரத்தை காட்சி படுத்தவுள்ளனர்.
வெறுமனே ஒரு பொருள் விற்கும் பொருள் வாங்கும் தளமாக இல்லாமல், இவ்விழாவில் பல கலாச்சார நிகழ்வுகள், போட்டி விளையாட்டுகள், கலைநிகழ்ச்சிகள் என வருவோரை கவரும் வண்ணம் பல ஏற்பாடுகளை செய்துள்ளனர் இவர்கள்.
3 நாள் நிகழ்ச்சியாக நடைப்பெறவுள்ள இந்த மாபெரும் வணிகச் சந்தை, வணிகர்களுக்கு தங்களின் பொருளையும் சேவையையும் பரவலான மக்களிடம் விளம்பரப்படுத்தி வருமானத்தை அதிகரிக்ககூடிய வாய்ப்பை ஏற்படுத்துவதோடு சமூகத்தின் பொருளாரத்தை வலுப்படுத்தும் ஒரு தளமாக இந்த வணிக விழா அமைகிறது. இதற்கு வணிகர்களும் பொதுமக்களும் கலந்து பயன்பெற வணிகக்களம் மலேசியா வர்த்தக சபை அழைக்கிறது.