Latestமலேசியா

பெயர் பிழைகளை சரிசெய்ய, விமான நிறுவனங்கள் கட்டணம் வசூலிப்பது இயல்பானது ; கூறுகிறது Mavcom

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 17 – விமான டிக்கெட்டுகளில், பெயர் மாற்றம் செய்வதற்கு கட்டணம் விதிப்பது, வழக்கமான ஒரு நடைமுறை தான் என, Mavcom எனப்படும் மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையம் கூறியுள்ளது.

பயணிகளின் நலனை பாதுகாக்க, Mavcom தவறிவிட்டதாக, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சாயிட் இப்ராஹிம் முன் வைத்துள்ள விமர்சனத்திற்கு அந்த விமானப் போக்குவரத்து ஆணையம் அவ்வாறு பதிலளித்துள்ளது.

விமானத்தில் பயணிக்க செக்-இன் செய்த போது, பெயரில் காணப்பட்ட சிறிய பிழையை சரிசெய்ய தமக்கு 50 ரிங்கிட் கட்டணம் விதிக்கப்பட்ட சம்பவத்தை மேற்கோள்காட்டி, சாயிட் கடந்த வாரம் Mavcom-மை சாடியிருந்தார்.

போதுமான விவரங்களை வழங்கிய போதிலும், தனது முன்பதிவு விவரங்களில் காணப்பட்ட பிழைக்காக தமக்கு கட்டணம் விதிக்கப்பட்டதாக, சாயிட் தமது X சமூக ஊடக பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், பயணிகளின் பெயர் அல்லது தகவலில் மாற்றத்தை செய்வதில், ஒவ்வொரு விமான நிறுவனமும் சொந்தக் கொள்கையைக் கொண்டுள்ளது. அது உலகளவில் பின்பற்றப்படும் வணிக நடைமுறையாகும். அது சுமூகமான பயண அனுபவங்களை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது என Mavcom ஓர் அறிக்கையின் வாயிலாக இன்று கூறியுள்ளது.

பயணிகள் தகவல் அறிந்து முடிவுகளை எடுப்பதை உறுதி செய்ய, விமான நிறுவனங்கள் தங்கள் சேவைகளில் அதிக வெளிப்படைத்தன்மையை கொண்டிருக்க வேண்டும் என கூறிய Mavcom, பெயர் மாற்றங்களுடன் தொடர்புடைய கட்டணங்கள் குறித்து விமான நிறுவனங்கள் பயணிகளுக்குத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் என்றது.

அவ்வாறு செய்யத் தவறும் விமான சேவை நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் எனவும் அது எச்சரித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!