சுங்கை பக்காப் தமிழ்ப்பள்ளி விரைவில் நிர்மாணிப்பீர்; கல்வி அமைச்சருக்கு பினாங்கு ம.இ.கா கோரிக்கை

கோலாலம்பூர், மார்ச் 14 – நீண்ட காலமாக இழுபறியாக இருந்துவரும் பினாங்கு சுங்கை பக்காப் தமிழ்ப்பள்ளியை நிர்மாணிப்பதில் கல்வி அமைச்சரும் நிபோங் தெபால் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்லினா சிடேக் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பினாங்கு ம.இ.காவின் தலைவர் டத்தோ ஜெ.தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய முன்னணி தலைமையிலான மத்திய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் சுங்கை பக்காப் தமிழ்ப் பள்ளியின் கட்டிடப் பணிக்காக 3.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டதோடு , தேவையான நிலமும் அடையாளம் காணப்பட்டது.
ஆனால் பள்ளியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்காமால் சிலர் மத்திய அரசாங்கம் ஒதுக்கிய நிதியை முழுமையாக பயன்படுத்திவிட்டதோடு மேலும் அதிக நிதி கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் செனட்டர் டாக்டர் லிங்கேஷ்வரன் சுங்கை பக்காப் தமிழ்ப் பள்ளியின் விவகாரத்தை எழுப்பியபோது வழக்கு முடிந்தபிறகே அப்பள்ளிக்கான புதிய கட்டடிடம் நிர்மாணிக்கப்படும் என கல்வி அமைச்சர் பாட்லினா சிடேக் தெரிவித்தது குறித்து பினாங்கு ம.இ.கா பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தினகரன் தெரிவித்தார்.
இந்த வழக்கு முடிந்து அல்லது நீதிமன்ற முடிவுனால் திருப்தியடையாத தரப்பினர் மேல் முறையீடு செய்யும் சாத்தியம் ஏற்பட்டால் சுங்கை பக்காப் வட்டார மக்களும், அப்பள்ளியின் மாணவர்களும் அதுவரை காத்திருக்க வேண்டுமா என தினகரன் வினவினார்.
2024 ஆம் ஆண்டு சுங்கை பக்காப் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலின் போது, இப்பகுதி மக்கள் மற்றும் வாக்காளர்களுக்கு வழக்கு முடிந்த பிறகு மட்டுமே சுங்கை பக்காப் தமிழ்ப்பள்ளி கட்டப்படும் என்பதை கல்வி அமைச்சர் கூறவில்லை.
எனவே இந்த பள்ளியை விரைவாக கட்டுவதற்கான தீர்வை கல்வி அமைச்சர் கண்டறிந்து காலம் தாழ்த்தாமல் சுங்கை பக்காப் தமிழ்ப்பள்ளி கட்டிடத்தை நிர்மாணிப்பதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என தினகரன் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டார்.