Latestமலேசியா

சுட்டெரிக்கும் சூரியனை நெருங்கிய நாசாவின் ஆளில்லா விண்கலம்; புதிய வரலாறு

வாஷிங்டன், டிசம்பர்-28, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின்
Parker Solar Probe ஆளில்லா விண்கலம், சுட்டெரிக்கும் சூரியனுக்கு மிக அருகில் சென்று விண்வெளித் துறையில் புதிய வரலாறு படைத்துள்ளது.

மனிதன் அனுப்பியதிலேயே சூரியனுக்கு இத்தனை நெருக்கத்தில் சென்ற முதல் விண்கலம் இது தான்.

டிசம்பர் 24-ம் தேதி சூரியனின் மேற்பரப்பிலிருந்து 6.1 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்த Parker Solar, தற்போது பாதுகாப்பாக செயல்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்க நேரப்படி இன்று காலை 10.30 மணிக்கு விண்கலத்திலிருந்து சமிக்ஞை கிடைக்குமென எதிர்பார்க்கப்படுவதாக நாசா கூறியது.

அதீத வெப்பம் மற்றும் கதிர்வீச்சைத் தாங்கிக் கொண்டு இது தொடர்ந்து செயல்பாட்டில் இருக்குமா என்பது அதன் பிறகே தெரிய வரும்.

சூரியனின் மேற்பரப்பை ஆராயவும், கரோனா எனப்படும் சூரியனின் வெளிப்புற வளிமண்டலம் குறித்த தகவலைப் பெறவும் 2018 ஆகஸ்டில் இந்த Parker Solar Probe விண்கலத்தை நாசா விண்ணில் செலுத்தியது.

சூரியனை ஆய்வு செய்வது இயலாத காரியமென்றாலும், நெருங்கிய தூரத்தில் ஆய்வு செய்யும் சாத்தியத்திற்காக 930 பாகை செல்சியஸ் தாங்கக்கூடிய வெப்பக் கவசத்துடன் மற்ற விண்கலங்களை விட சூரியனுக்கு மிக நெருக்கமாக Parker Solar கடக்கிறது.

ஏற்கெனவே 21 முறை சூரியனை அது கடந்து விட்டாலும், தற்போது மிக அருகாமையில் சூரியனை அது சுற்றித் திரும்பியுள்ளது.

சூரியக் காற்று எவ்வாறு உருவாகிறது போன்ற இந்த பிரபஞ்சத்தைப் பற்றிய நீண்ட கால கேள்விகளுக்கு இந்த Parker Solar விண்கலம் வாயிலாக விடை கிடைக்குமென அறிவியலாளர்கள் நம்புகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!