சவ்ஜானா, ஆகஸ்ட் 25 -பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் மலேசியா சரியான இலக்கை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.
தொழில்முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் அவ்வாறு கூறியுள்ளார்.
பொருளாதாரமும் சீரடைந்து வருகிறது; மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் மக்களும் ஒன்றிணைந்து அரசாங்கத்தோடு தோள் கொடுத்தால், நீடித்த அனுகூலங்களைப் பெறலாமென்றார் அவர்.
ஆனால், குறிப்பிட்ட சில தரப்பினர் இன-மத அம்சங்களை முன் வைத்து மக்களிடையே வேற்றுமையை வளர்த்து வருகின்றனர்.
அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக எந்த எல்லைக்கும் போக அவர்கள் தயாராக உள்ளனர்.
அது போன்ற விஷயங்களுக்கு இடம் கொடுக்காமல் இந்த சுதந்திர தின கொண்டாட்ட மாதத்தில் மலேசியர்கள் ஒற்றுமையை மேலோங்கச் செய்ய வேண்டுமென, சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ரமணன் கேட்டுக் கொண்டார்.
சுங்கை பூலோ சவ்ஜானா உத்தாமா (Saujana Utama) சுற்று வட்டாரங்களில் இன்று வருகை மேற்கொண்டு உள்ளூர் சமூகத் தலைவர்கள், கிராமத் தலைவர்கள், பொது மக்கள் ஆகியோரைச் சந்தித்து அளவளாவிய போது அவர் அவ்வாறு சொன்னார்.
சுங்கை பூலோ வட்டாரத்தில் மேம்படுத்தப்பட வேண்டிய விஷயங்கள் குறித்தும் அதன் போது மக்களின் கருத்துகளை அவர் கேட்டறிந்தார்.
சுங்கை பூலோ தொகுதி மக்களுக்கு மிகச் சிறந்தவற்றை வழங்குவதே தனது குறிக்கோள் டத்தோ ரமணன் தெரிவித்தார்.