நியூ யோர்க், ஆகஸ்ட் -25, 2 மாதங்களாக அனைத்துலக விண்வெளி மையத்தில் சிக்கித் தவிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், எப்போது பூமி திரும்புவார் என்பது இன்று தெரிய வரலாம்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA) அது குறித்து இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
வெறும் 8 நாள் பயணமாக விண்வெளி சென்ற சுனிதாவும் அமெரிக்காவின் மற்றொரு விண்வெளி வீரரான புட்ச் வில்மோரும் (Butch Wilmore) இன்னும் பூமி திரும்பவில்லை.
Star Liner விண்கலத்தில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு மற்றும் தொழில்நுட்ப கோளாறால் அவர்கள் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்படாததால், நாசா விஞ்ஞானிகளும் கலக்கத்தில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் இருவரும் பூமிக்குத் திரும்ப 2 தேர்வுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒன்று, இருவரும் சென்ற Starliner விண்கலத்திலேயே திரும்ப வேண்டும்.
அல்லது, போயிங் ( Boeing) நிறுவனத்தின் நேரெதிர் போட்டியாளரான Space X-சின் Crew Dragon விண்கலத்தில் திரும்ப வேண்டும்.
இரண்டாவது தேர்வு, போயிங் நிறுவனத்தின் எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கி விடும் என்பதால், நாசா எடுக்கப் போகும் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.